Skip to main content

நீர் மேலாண்மைக்கான ’ஸ்கோச் கோல்டு’ விருதை பெற்றது தேனி!!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
 Theni got Schench Gold Award for Water Management

 

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீர் செய்து, நீர் மேலாண்மையை சிறப்பாக செய்த காரணத்திற்காக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு ’ஸ்கோச் கோல்டு’ எனும் விருது கிடைத்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும் இந்த விருதானது சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது என வகைப்படுத்தப்படுகிறது. இதில் 2020-ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செய்ததற்காக சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.

இதுதொடர்பாக  கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, தேனி மாவட்டத்தில் உள்ள 229 நீர்நிலைகளை குடிமராமத்துப் பணியிலும் நூறு நீர்நிலைகளை தனியார் பங்களிப்பிலும் தூர்வாரியுள்ளது மாவட்ட நிர்வாகம். மழைப்பொழிவை அதிகரிக்கும் மியோவாக்கி காடுகளை அமைத்தல், நகர, பேரூராட்சிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் தடுத்து அதனை சுத்திகரித்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற செயல்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது. இந்திய அளவில் 130 மாவட்டங்கள் இவ்விருதிற்கான பரிந்துரையில் இருந்தன. டெல்லியில் நடந்த விருது தேர்விற்கான நிகழ்வில், தேனி மாவட்ட சப்-கலெக்டர் சினேகா கலந்துகொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை செயல்பாடுகளை விளக்கினார். அதை தொடர்ந்து ஆன்லைன் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தேனி மாவட்டம் அதிக ஓட்டுகள் பெற்று விருது கிடைத்துள்ளது என்று கூறினார்.

இதுசம்பந்தமாக தேனிமாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் கேட்டபோது, சிறந்த நீர் மேலாண்மைக்கான ஸ்கோச் கோல்டு விருது பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்