கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி உள்ளது. சென்னை, மும்பையில் பத்திரிகையாளர்கள் சிலரும் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தாங்கள் தங்களின் குடும்பத்தினரும் தங்களின் உடல் நலனில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பான வேண்டுகோள் விடுத்து இருந்தார். வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்லுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கிருமி நாசினி திரவம் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம் நடத்த கலெக்டர் பல்லவி பல்தேவ் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனி அல்லிநகரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், போடி நகர் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நேற்று மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். பத்திரிகையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு கரோனா குறித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கலெக்டரின் இந்த சிறப்பு ஏற்பாடு, தேனி மாவட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் இருந்த கரோனா குறித்த அச்சத்தையும், பயத்தையும் போக்கும் வகையில் அமைந்துள்ளது