உலகளவில் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பல திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் சூர்யாவிற்கு தனது பாராட்டுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், 'தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!' தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா முதல்வரின் பாராட்டிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்' என தெரிவித்துள்ளார்.