Skip to main content

நீட் தேர்வில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய சதி: கி.வீரமணி

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
நீட் தேர்வில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய சதி: கி.வீரமணி

நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும், ஏன் தமிழ் நாட்டு மக்களுக்கும் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய பின்னணியில் உள்ள சதியை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள சமூகநீதி அறிக்கை வருமாறு:

ஏதோ இராமாயணத்தில் தான் ராமன் சூத்திரன் சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்று விட்டான் என்று நினைத்து விடாதீர்கள். சம்பூக வதைப் படலம் தொடர்கிறது அந்தக் கதை இதோ தொடர்கிறது. இராமராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்று கூறும் பிஜேபி ஆட் சியில் நீட் தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களின்-, கிராமப்புற மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கக்கூடியது, சமூ கநீதியின் கழுத்தைச் சீவக் கூடியது என்று தொடக்க முதலே தொண்டை வறளக் கத்தினோம், சமூகநீதியாளர் களை எல்லாம் ஒன்றிணைத்துப் பிரச்சாரம் செய்தோம், மாணவர் பெற்றோர் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்குகளை நடத்தினோம், பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்!

கழகம் சொன்னது நடந்தேவிட்டது!

நீட் வந்தால் நேரும் இழப்புகளைச் சுட்டிக்காட்டினோம்; அது இப்பொழுது நடந்தே விட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக் களும் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடைசி வரை அதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவில்லை மத்திய பிஜேபி அரசு. கழுத்தறுப்பு நாடகத்தைக் கச்சித மாக அரங்கேற்றுகிறது?

மத்திய அமைச்சர் சொன்னது என்னாயிற்று?

குமுறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு வெடித்து எழும் என்ற நிலையில், மத்திய இணை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன் என்பவர் மத்திய அரசின் சார்பில் ஓர் உத்தரவாதத்தை அளித்தார். தமிழ்நாடு அரசு நீட்டிலிருந்து ஓராண்டுக்கு விலக்குக் கோரி அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தால், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கும் என்றார். அதனை வழிமொழிந்தவர் மற்றொரு மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன். அதன்படி அவசர அவசரமாக அவசரச் சட்டத்தை தயாரித்து அனுப்பியது தமிழக அரசு.

அமைச்சர்கள், செயலாளர்கள் காவடியும் தூக்கினர் டெல்லிக்கு. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்தது. நீட் தேர்வு எழுதியவர்களுக்கும், மாநிலக் கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் ஓர் திட்டத்தை கொண்டு வாருங்கள் என்று உச்சநீதிமன்றம் முதல் நாள் கூறியது! தமிழ்நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்கப்போகிறது என்று கோடானுகோடி மக்கள் எதிர்ப்பார்த் திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?


மறுபடியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது என்ன நடந்தது? அதற்கு முதல் வாரத்தில் தமிழ்நாட்டின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறோம் என்று உறுதிமொழி அளித்த மத்திய அரசு தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர முடியாது என்று திடீர் பல்டியடித்துவிட்டது.

இருதரப்பிலும் பாதிக்காத வகையில் திட்டத்தைக் கொண்டு வாருங்கள் என்று அதற்கு முதல் வாரத்தில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் இந்த மாற்றத்திற்கான காரணத்தையும் கேட்கவில்லை. கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி இரு சாராருக்கும் பாதிப்பில்லாமல் திட்டத்தைக் கொண்டுவர உத்தரவிடப்பட்டதே அது என்னாயிற்று என்றும் உச்சநீதிமன்றம் கேட்கவில்லை.

ஒரு சில நிமிடங்களிலேயே தீர்ப்பா?

எதிர்மனுதாரர்களின் வழக்குரைஞரின் கருத்தையும் உச்சநீதிமன்றம் கேட்கவில்லை. வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், மத்திய அரசின் தரப்பில் தமிழக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான்! கண்ணிமைக்கு முன்னே நீட் தேர்வு செல்லும்; மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடரலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திருவாய் மலர்ந்து விட்டனர்.

நாட்டில் என்ன நடக்கிறது? மத்திய அமைச்சரின் உறுதிமொழிக்கு உத்தரவாதம் இல்லை முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு மரியாதை இல்லை - நாணயமும் இல்லை.

சமரச திட்டத்துடன் வாருங்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளும் காற்றோடு காற்றாகப் பறந்து விட்டன. நீட்டுக்கு விலக்குக் கிடைக்கும் என்று கிளிப் பிள்ளைப் பாடம் படித்து மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களை நம்ப வைத்த மாநில அரசிடமிருந்தும் பேச்சு மூச்சு இல்லை. இனி யாரை நம்புவது? யாரிடமிருந்து வாக்கு நாணயத்தை எதிர்ப்பார்ப்பது? நீட் தேர்வின் அடிப் படையில் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. மருத்துவக் கனவு கண்ட இருபால் மாணவர்களின் கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டன. ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார் (வேண்டாம்-, வேண்டாம், தற்கொலை தீர்வு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்).

மாநிலப் பாடத் திட்டத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதியான 199.25 கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமில்லை.

அப்படி என்றால் யார் யாருக்குத்தான் கிடைத்தது? முதல் 30 இடங்களைப் பெற்றவர்களின் பட்டியல் இதோ...

1. முகேஷ் கன்னா, 2. ஜோனா ராய், 3. அனஷ்ஷா ஜாகப், 4. மானஸ் தாஸ், 5. ஆருஷி அகர்வால், 6. அகன்ஷா மேத்தா, 7. ரானா முன்சி, 8. காத்யாயனி கோஸ்வாமி, 9. சேடன் ஜஸ்வால், 10.விக்ரம் ஷில்ஜி, 11. விஸ்வத் குப்தா, 12. அனுமா குருப், 13. சம்ஸ்ஜி ராய், 14. ஜோஸ் நாய்க், 15. ஹன்ஸா சர்ஸாஜி, 16.ஷ்ர்யா பானர்ஜி, 17. கோகுல் நாயர், 18. அபிஷேக் மேமனன், 19. மனசா மேனன்

இவர்களில் ஒரே ஒருவராவது தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? பார்ப்பனர்களும், பனியாக்களும் தட்டிப் பறித்துக் கொண்டனரே! இதன் பின்னணியில் உயர்ஜாதியினரின் சதியில்லையா? கரையான் புற்றெடுக்க கருநாகங்களா?

கடந்தாண்டு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 30 இடங்களைப் பெற்ற சிபிஎஸ்இ மாணவர்கள் நீட் தேர்வால் இவ்வாண்டு அபகரித்த இடங்கள் எத்தனைத் தெரியுமா? 1310 இடங்கள்! அதாவது 43 மடங்கு அதிகம்! இதைவிட வழிப்பறி மகாக் கொள்ளை வேறு ஒன்று இருக்க முடியுமா?

யார்வீட்டுப் பணம்? மாநில அரசின் பணம்! தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் யார் யார் எல்லாம் ஆக்கிரமிக்கப் போகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா? தர்மம் வென்றது என்று பார்ப்பனர்கள் சொல்லுவதன் பொருள் புரிகிறதா?

நீட் வந்தால் இதுதான் நிலை என்று திராவிடர் கழகம் படித்துப் படித்துச் சொன்னதே - அதுதானே இப்பொழுது நடந்திருக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று எண்ணி அலட்சியமாக இருந்த பெற்றோர்கள் இனிமேலாவது கண் விழிப்பார்களா?

இதற்கு முன்பும் சமூகநீதிக்கு இத்தகு இடர்ப்பாடுகள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது நிலைக்கவில்லை. அதே போல் இதையும்  நிலைக்கவிடாமல் - நம்மால் செய்ய முடியும். திராவிடர் கழகத்தின் குரலுக்குச் செவிமடுங்கள். மக்கள் மன்றத்தின் முன் எந்த மன்றத்தின் அதிகாரமும் வெல்லப் போவதில்லை. வீதிக்கு வாருங்கள் - போராடு வோம், வெற்றி பெறுவோம். இப்பொழுது இல்லையென்றால் வேறு எப்பொழுது என்ற நெருக்கடியைக் கொடுத்து பார்ப்பனர்கள் மருத்துவக் கல்லூரி இடங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு விட்டார்கள். இது தொடரவிடப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்,


சார்ந்த செய்திகள்