தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுடைய முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் இருக்கக்கூடிய சில நபர்கள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வாட்ஸ்ஆப் ஆடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது போலீசார் தனிப்படை அமைத்து இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.