விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களிலும் தற்போது வாட்ஸ் அப்பில் உலா வருகிறது பரபரப்பான வடை செய்தி. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நமது வீடுகளில் உளுந்து வடை, மசால் வடை என இரண்டு வகையான வடைகளை சுடுவார்கள். கடைகளில் கீரை வடை, வாழைப் பூ வடை, ரச வடை, தயிர் வடை என்று கிடைக்கும். ஆனால் விருத்தாசலம் நகரில் உள்ள விருதகிரீஷ்வரர் கோவிலின் அருகே உள்ள ''ருசி'' உணவகத்தில்தான் இன்று வரை தவலை வடை கிடைக்கும். கடைக்குள் நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. விருத்தாசலம் சென்றால் இந்தக் கடைக்கு சென்று தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள் என்பதுதான் வாட்ஸ் அப்பில் உலா வரும் அந்த செய்தி.
விருத்தாசலம் நகரில் இருந்த நம்மை நெருங்கிய உளுந்தூர்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தவலை வடை கடை எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். கடை இருக்கும் இடத்தை சொல்லி, இந்த வடைக்காகவா சார் நீங்க விருத்தாசலம் வந்தீங்க? என்றோம். ஆமாங்க... வாட்ஸ் அப் குரூப்ல திரும்ப திரும்ப போட்டாங்க... அதான் ஆசையை அடக்க முடியல என்றார்.
சரி நாமும் ரெண்டு வடையை ருசிக்கலாமுன்னு, ருசி கடைக்கு சென்றோம். அந்த உணவகத்தின் உரிமையாளர் ருசி பாலகிருஷ்ணன். திருமண சமையல் காண்ட்ராக்டரான ருசி பாலகிருஷ்ணன், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமம், நகரங்களில் பெயர் போனவர். அவர் மகன் வெங்கடேசன் கடையை நடத்தி வருகிறார்.
''நாங்கள் கடையை ஆரம்பிச்சபோது தவலை வடையை செய்தோம். நெருப்பை மூட்டி, செம்பு தவலையை கவிழ்த்து வைத்து, அது சூடான பிறகு இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதனை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
காலமாற்றத்தில் அதனை தயாரிக்கும் முறை மாறியிருக்கிறதே தவிர, தவலை வடையின் ருசி அப்படியேதான் எங்கள் ருசி கடையில் கிடைக்கிறது. இன்றும் எங்கள் கடையில் காத்திருந்து வாங்கி செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதே எங்கள் நோக்கம்'' என்றார். தவலை வடையை காத்திருந்து வாங்கி செல்வதை நாம் நேரடியாகவே பார்க்க முடிந்தது. ருசி கடையில இருக்கும் வடை தனி ருசிதான்.