தமிழ் பேரரசன் ராசராசன் கட்டிய தஞ்சை பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு மற்றும் நாம் தமிழர் கட்சி, மேலும் சில தமிழ் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று உறுதி அளித்து பதில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை கைவிட்டனர். இந்த நிலையில் தான் ஜனவரி 31- ந் தேதி புனித நீர் எடுத்துவரப்பட்டு பிப்ரவரி 1- ந் தேதி முதல் யாகசாலையில் வைத்து யாகம் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இதில் தேவாரம், திருவாசகம் படிக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தது. ஆனால் யாக சாலையில் யாக குண்டங்களில் தமிழுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளதாக பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் கொடுக்க சென்றனர்.
இது குறித்து பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறும் போது, "தமிழர்கள் வழிபாட்டுக்காக தமிழ் கடவுளான சிவனுக்கு தமிழ் பேரரசன் ராசராசன் கோயில் கட்டினான். தமிழன் கட்டிய கோயிலில் தமிழை புறக்கணிப்பது ஏற்க முடியாது. இடையில் வந்த சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்க முடியாது.
அதனால் தான் நீதிமன்றம் போய் தமிழுக்கான உரிமையை மீட்டோம். ஆனால் யாக சாலையில் 108 குண்டம் அமைத்து சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தமிழை நடைபாதையில் வைத்து ஓதச் சொல்கிறார்கள். யாககுண்டத்தில் தமிழைக் காணோம். இன்று இப்படி புறக்கணிப்பவர்கள் நாளை (05/02/2020) குடமுழுக்கு செய்யும் போது முழுமையாக தமிழை ஒதுக்கி விடுவார்களோ என்றாஅச்சம் எழுந்துள்ளது. அதனால் தான் நீதிமன்ற உத்தரவுப்படி யாக குண்டம் முதல் கருவறை வரை தமிழ் ஒலிக்க வேண்டும் என்று இணை ஆணையரிடம் மனு கொடுக்கிறோம்" என்றார்.