அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்த 15.12.2021 அன்று முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்கள் என நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கமணி அமைச்சராக இருந்த 23.05.2016 முதல் 06.05.2021 தேதிவரை முறைகேடுகள் நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. 14 இடங்களில் இன்று (20.12.2021) சோதனை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்கள், சேலம் மாவட்டத்தில் ஒரு இடம் என மொத்தம் 14 இடங்களில் இன்று சோதனை நடைபெற்றுவருகிறது. சேலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பரான குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது.