நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “சமூகச் சிந்தனையோடு, சீர்திருத்தக் கருத்துகளையும் தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, இயற்கை நலனில் ஆர்வம் கொண்ட, ‘சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும், பத்மஶ்ரீ திரு. விவேக், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கின்றது.
மரங்களின் காவலர், மனித நேயப் பண்பாளர், கலைப்பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்ற அவரது இழப்பு, திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் நல்லதொரு நண்பரை இழந்த, பெரு வலி எனக்கு. அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்” எனப் பதிவிட்டுள்ளார்.