தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தமிழ் முஸ்லிம் சங்கம் சார்பில், சமூக நீதி கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் த.மா.கா மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஹஸன் அலி பேசும் போது, சமூக நல்லிணக்கத்திற்கு ராமநாதபுரம் ஒரு எடுத்துக்காட்டு என்றவர், சேதுபதி மன்னர், வாலஜா நவாபுக்கு தனது அரண்மனையில் இஃப்தார் விருந்து கொடுத்ததை நினைவு கூர்ந்தார். விவேகானந்தர் சிகாகோ செல்ல, சேதுபதி மன்னரோடு சேர்ந்து கீழக்கரை முஸ்லிம்கள் உதவியதை கோடிட்டு காட்டினார்.
அடுத்துப் பேசிய தனியரசு எம்.எல்.ஏ., கல்வி குறைந்த, வறுமை நிறைந்த சமூகத்தில் சமூக இணக்கமும், சகிப்புத்தன்மையும் இருந்தது என்றவர், இப்போது நவீன சமூகத்தில் அது குறைவதாக கவலைப் பட்டார். இதற்கு கல்வி நிலையங்களில் வகுப்பு வாதம் புகுத்தப்படுவது காரணம் என குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக மக்களை திரட்ட வேண்டும் என்றார். அமைதியைத்தான் மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய அபுபக்கர் எம்.எல்.ஏ., அரசியல் சாசன சட்டத்தில் சமூக நீதியை நிலை நாட்டியவர் அம்பேத்கார் என்றவர், நீதிக் கட்சியின் சேவைகளையும் எடுத்துக் கூறினார்.
நிறைவுரையாற்றிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., கடந்த 2004ல் பாங்காக்கில் அஞ்சு மன் அரங்கில், தான் பேசியதை நினைவு கூர்ந்தார்.
கடந்த 200 ஆண்டுகளாக தமிழக கடலோர மக்கள், தாய்லாந்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருப்பதாகவும், பாங்காக்கை சர்வதேச தொழில் நகரமாக மாற்றியதில் நமக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் கூறியவர், இங்கு காரைக்கால் மரைக்காயர்களை நினைவு கூறும் வகையில் காரைக்கால் வீதியும், தம்பி ஷா என்பவர் பெயரில் வீதியும் இருப்பதே அதற்கு சான்று என்றார்.
நமது தமிழக முன்னோர்கள் இங்கு இந்த தமிழ் பள்ளிவாசலையும், அது போல ஒரு மாரியம்மன் கோயிலையும் கட்டியதாக வரலாற்று சான்றுகளோடு பேசினார். அவர்கள் மதத்தால் வேறுபட்டாலும், தமிழால் ஒன்றுபட்டார்கள் என்றும் அது தான் நமது பண்பாடு என்றார்.
தாய்லாந்தில் சயாம் ரயில் பாதை அமைக்கப்பட்டதில் தமிழர்களின் ரத்தமும், வியர்வையும் கொட்டப்பட்டதாக கூறியவர், இவ்வழியாக தான் நேதாஜி பர்மாவுக்கு சிங்கப்பூரிலிருந்து சென்றதாக கூறினார்.
பிறகு சமகால தாயக அரசியலை பேசியவர், மதவெறியர்கள் ஒரு காலத்திலும் தமிழகத்தை வெல்ல முடியாது என்றார். தந்தை பெரியார் சமூக நீதியின் அடையாளம் என்றவர், அவரை விமர்சிப்பவர்களுக்கு எதிராத களமாடுவோம் என்றார்.
பாபர், ஒளரங்கசீப், திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் மத நல்லிணக்கத்திற்கு ஆற்றிய சேவைகளை குறிப்பட்டவர், அவர்களை எதிரிகளாக சிலர் சித்தரிப்பதை எவ்வளவு அபத்தம் என்பதை வரலாற்று ஆதாரத்துடன் எடுத்துரைத்தார். சமூக நீதியும். சமூக நல்லிணக்கமும் நமது இரு கண்கள் என்றவர், சமூகங்களுக்கிடையே பிளவை, மோதலை உருவாக்கும் தீய சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
சுமார் 800க்கும் அதிகமானோர் பங்கேற்ற இக்கருத்தரங்கில், 100 பெண்களும் கலந்துக் கொண்டனர். தமிழ் பள்ளிவாசலின் அரங்கு நிறைந்து நிகழ்ச்சி முடியும் வரை கூட்டம் அப்படியே இருந்தது.
இந்நிகழ்வில் சங்க தலைவர் சதக் நெய்னா, செயலாளர் ஷமீர், துணைத் தலைவர்கள் வாவு. அலி, அக்பர் அலி துணைச் செயலர்கள் உமர், எஹ்யா அலீ , பொருளாளர் வஹாப், தமிழ் சங்க நிர்வாகிகள் தேவதாஸ், கிருஷ்ண மூர்த்தி, சங்க முன்னோடிகள் ஹுமாயூன், முனைவர் ரபியுதீன்,, வாவு சம்சுதீன்,, சதக் அலி பேங்காக் பள்ளி இமாம் முகையதீன் ஆலிம் சிராஜ், சந்தபுரி பள்ளி தலைவர் பாரூக், செயலர் ராஜா முகம்மது, பொருளாளர் அஷ்ரப்,MS செய்யது யஹ்யா , இலங்கை மவ்லவி பர்ஹான் ஆலிம் ஃபாஸி, மற்றும் அஃப்சர், முகம்மது இர்பான், பின்னத் தூர் சாதிக் , அனஸ், மிஸ்பாஹ், பைசல், நீடூர் ரியால் உள்ளிட்ட வர்களும் மனிதநேய சொந்தங்களும் பங்கேற்றனர்.
ஏராளமான தொழில் அதிபர்களும், சமூக ஆர்வலர்களும் தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து , ம ஜக வின் அரசியல் துடிப்புள்ளதாகவும், தூர நோக்குடன் இருப்பதாவும், தென் கிழக்காசிய தமிழர்கள் அதை வரவேற்பதாவும் கூறி பாராட்டினர். அது போல் தனியரசுவின் போர் குணமிக்க தமிழின அரசியலையும் பாராட்டினர்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு தனது புதுக்கல்லூரி நண்பர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அளவளாவி னார். அவர்களின் பேராதரவுக்கு நன்றி பாராட்டினார்.