ஜவுளி தொழிலின் கேந்திரமா இருக்கிறது ஈரோடு, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் என தொடங்கி மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநில வியாபாரிகளும் ஈரோடு வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக விற்பனைக்கு வாங்கிச் செல்வது வழக்கம். அதேபோல் தான் மஞ்சள் விற்பனையும் வட மாநில மஞ்சள் வியாபாரிகள் தங்களின் விற்பனைக்காக ஈரோடு மஞ்சளை வாங்கிச் செல்கிறார்கள். இப்படி இந்த தொழில்கள் ஏதோ வியாபாரிகள், விற்பனையாளர்களுடன் நிற்பதில்லை. இதன் பொருட்களை ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் சுமக்கும் சுமை பணியாளர்கள் மிக முக்கியமானவர்கள்.
ஈராேட்டில் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. வெளியூர் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் சரக்குகள், இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி இறக்கி வருகின்றனர். சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. கூலி உயர்வு பேச்சுவார்த்தை இவ்வாண்டு நடத்தப்படவில்லை அதை தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். என்பதோடு சில ஜவுளி கடை முதலாளிகள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு விரோதமாக நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்குவோர் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். மற்ற சங்க தலைவர்களான விஜயகுமார், அயன்துரை, இளையராஜா, பாட்டாளி ஆறுமுகம், சிஐடியு. தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவில்லையென்றால் சுமை பணியாளர்கள் காலவரையற்ற ஸ்டைக்கில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.