நெல்லைப் பக்கம் உள்ள முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம் பகுதிகளில் கடந்த 2012, 2013 ஆண்டுகளில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தரப்பிலுமாக 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த செப் 13, 15 ஆகிய தேதிகளில் கீழச்செவல் நயினார்குளம் சங்கரசுப்பிரமணியனும், கோபால சமுத்திரத்தின் மாரியப்பன் இருவரும் பழிக்குப் பழியாகத் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு பிரிவினருக்கிடையே பதற்றம் பரவியதுடன் முன்னீர்பள்ளம், கோபால சமுத்திரம் கீழச்செவல் உள்ளிட்ட கிராமங்களில் பீதி பரவியது. இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் 12 பேர் என 24 பேர் கைது செய்து செய்யப்பட்டனர். பதற்றம் பரவிய பகுதிகளில் மோதல் ஏற்படாமல் தடுக்க நெல்லை மற்றும் வெளிமாவட்டப் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர்.
மேலும் சம்பவம் நடக்காமலிருக்க நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் கடந்த இரண்டு நாட்களாகக் கோபால சமுத்திரம், கீழச்செவல் பகுதிகளில் இரவு நேரம் சைக்கிளில் சென்று ஆய்வு செய்கிறார். தினமும் துணிச்சலாக எஸ்.பி. தனியாகவே செல்கிறார். போலீசார் பீட் போடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து பணியிலிருக்கிறார்களா என டைரியில் கையெழுத்திடுகிறார். அது சமயம் கோபால சமுத்திரம் பகுதியின் மூதாட்டி ஒருவர் எஸ்.பி.யிடம் விவகாரத்தைச் சொல்ல, உடனே அவரோடு போலீசாரை அனுப்பி அந்த மூதாட்டி வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடந்த விவகாரத்தை மேலும் மூளாமல் தடுத்துத் தீர்த்து வைக்கிறார். இதுபோன்று பல கிராமங்களில் எஸ்.பி.யே பகல் இரவு வேலைகளில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பதற்றப்பகுதி கிராம மக்கள் நிம்மதியாகவும் உள்ளனராம்.
காவலைப் பலப்படுத்தியுள்ளோம். நான் எந்த நேரத்திலும் ஆய்வுக்கு வருவேன் என்பதால். காவலர்களும் விழிப்புடன் செயல்படுகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்கிறார் எஸ்.பி. மணிவண்ணன்.