தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்கீப்பர் பணியிலிருந்த இளம்பெண் நித்யா சந்திரன் கேரளாவின் கொல்லம் நகரைச் சேர்ந்தவர். பிப்ரவரி 16 அன்று பணியிலிருந்த போது மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு ஆளாகி தப்பியவர். சிகிச்சைக்குப் பின்பு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த நித்யா சந்திரனுடன் அவரது கணவர் சுகுமாரனும் உடனிருந்தார்.
அப்போது பேசிய அவர், “15 நிமிடத்திற்கும் மேலாக என்னிடம் அத்துமீறிய அந்த நபரிடம் போராடித் தப்பித்து வீதிக்கு வந்த என்னை பொதுமக்கள் காப்பாற்றினர். அவர்களின் உதவியோடு எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றேன். அந்த நபர் முழுமையாக தமிழில் மட்டுமே பேசினார். மேல் சட்டை அணியாமல் காக்கி பேண்ட் போட்டிருந்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபரிடம் முடிந்த அளவு போராடி வெற்றி பெற்றுள்ளேன். என்னை பாதிக்கப்பட்ட பெண்ணாகவே சித்தரிப்பது எனக்கு வேதனையாக உள்ளது. அதை விட ஒரு பெண்ணாக எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்களின் போராட்டம் குறித்தும் சொல்ல வேண்டும்.
தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கேரளாவின் கொல்லம் மாவட்ட பத்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்று பின்பு தான் தெரியவந்தது. நான் தமிழ்நாட்டு இளைஞரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படவில்லை. கேரள ஊடகங்கள் கூட தமிழ்நாட்டில் கேரளப்பெண் பாதிக்கப்பட்டுவிட்டதாகவே என்னை சித்தரித்திருக்கின்றன. ஆனால், எனது போராட்டத்தைப் பற்றியும் நான் போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும் குறிப்பிடவில்லை” என வேதனைப்பட்டவர், “பெண்கள் சுயமாகவே அவர்கள் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும், அவர்கள் இறுதிவரை போராட வேண்டும்” என்றார்.
அவரது கணவரான சுகுமாரனோ, “எனது மனைவி 15 நிமிடம் நடைபெற்ற போரில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் பாலியல் இச்சைக்கு தன்னை அணுகவிடாமல் அந்த நபரிடம் எனது மனைவி போராடி உள்ளார். ஆனால், கோபமடைந்த அந்த நபர் என் மனைவியை கொலை செய்ய முயன்றுள்ளார்” என்றார்.