நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களின் கரோனா தொற்று அன்றாடம் சராசரியாக 200 - 300 என்ற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கின்றது. தினசரி தொற்று நோயாளிகளின் வரத்து அதிகரிப்பதால், நெல்லை அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு வராண்டாக்களில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையிலோ, தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளதாம். தரையில் படுக்கவைக்கப்பட்டு சிரமப்படும் நோயாளிகளுக்கு படுக்கைவசதி செய்து தரப்படவில்லை. பெட் வேண்டுமென்றால் 50 அல்லது 100 ருபாய் லஞ்சம் கொடுத்தாலே படுக்கை கிடைக்கிற அளவுக்கு நிலைமை போய்க்கொண்டிருக்க, கரோனா நோயாளிகளுக்கான உணவு கூட சரியான நேரங்களில் வழங்கப்படுவதில்லையாம். இதுபோன்று பல்வேறு வகையில் அவதிப்படும் கரோனா நோயாளிகள் மனஅழுத்தம், மனஉளைச்சலில் தவிப்பதாகவும் வேதனைப்படுகின்றனர்.
மேலும், கரோனாவைக் காரணம் காட்டி இந்த மாவட்ட மருத்துவமனைக்கு வரும் சாதாரண பிற நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு, அவர்கள் பாளை அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி கைகாட்டப்படுகின்றனர். இந்தக் குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்த மாவட்டக் கலெக்டரான அருண் சுந்தர்தயாளன் அவைகளைச் சுட்டிக்காட்டியும் கூட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. மாவட்ட மருத்துவமனையின் இந்தக் குறைபாடுகள் மக்களால் சுட்டிக்காட்டியும்கூட நிவாரணமில்லாத நிலையில் தென்காசி மாவட்ட மருத்துவமனையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து வருவதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.