Skip to main content

கோயில் குளம் ஆக்கிரமிப்பு: கண்டறிந்து சட்டப்படி அகற்ற தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு..! 

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

Temple pond occupation; Judges order Tamil Nadu government to find and remove according to law ..!
                                                    மாதிரி படம் 

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள யானை குளத்தில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உலகப் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலைச் சுற்றி, நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் ஏராளமான குளங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

கோவில் யானைகளைக் குளிக்கச் செய்வதற்காக 4 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்ட யானை குளத்தில், தற்போது 3 ஏக்கர் பரப்புவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது. 

 

மேலும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அவற்றை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்