கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்ட குழுக்கள் அமைப்பது குறித்தும், கோவில்களில் உள்ள கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலைய துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில், வனத்துறை முதன்மை தலைமை வனக்காவலர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டப்படி மாவட்ட குழுக்கள் அமைக்கப்படவில்லை எனவும், கோவில் யானைகளுக்கு பாகன்கள் இல்லை எனவும், கோவில்களில் உள்ள கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்ட குழுக்கள் அமைப்பது குறித்தும், கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.