தமிழ்நாட்டில் 2021 - 22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 14ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில் தற்போது மும்முரம் காட்டி வருகின்றன.
கரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தின் காரணமாக அதிக அளவிலான மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இந்த ஆண்டு ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதேநேரம், ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தரமான கல்வியைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு என்று பல புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காகப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேளதாளங்களுடன் வீதி வீதியாகச் சென்று மாணவர்களையும் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.