ஈரோட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று நடைபெற்றது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு அலுவலகங்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையாக உள்ளதால் அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; 1.6.2009 ஆண்டு முதல் பணியாற்றி ஏழாவது ஊதிய குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டு கால இடைவெளியில் சுமார் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதியம் முரண்பாட்டினை களைத்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டும்; அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி பதவி உயர்வு வழங்க வேண்டும்; மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரவிச்சந்திரன், இந்திரகுமார், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.