கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் நாளை (14/06/2021) முதல் அமலுக்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நாளை (14/06/2021) முதல் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 'டாஸ்மாக்' கடைகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகளை 'டாஸ்மாக்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளைத் திறக்கக் கூடாது. 'டாஸ்மாக்' கடைக்கு வருவோர் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 'டாஸ்மாக்' கடைகளில் ஏராளமானோர் குவிவதைத் தடுக்கப் பணியாளர்கள் விரைவாகப் பணி மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக்கில் கூட்டம் குவிவதைத் தடுக்க நேரத்தைக் குறிப்பிட்டு டோக்கன் தர வேண்டும். மாலை 04.00 மணிக்கு மேல் டோக்கன் விநியோகம் கூடாது; மாலை 05.00 மணிக்கு கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும்.
'டாஸ்மாக்' கடையில் இருந்து 300- 500 மீட்டர் தொலைவில் டோக்கன் விநியோகிக்கப்பட வேண்டும். 'டாஸ்மாக்' கடைகளில் ஒரு சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் பணிப்புரியக் கூடாது. கடை முன்பு சமூக இடைவெளிப் பின்பற்றப்படுகிறதா என இரண்டு பணியாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.