கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. சென்னை பெருநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகள் 18.08.2020 முதல் திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க காலையிலேயே குடிமகன்கள் வரிசையாக வந்து நிற்க தொடங்கிவிட்டனர். இதில் ஒரு குடிமகன், டாஸ்மாக் கடைகள் சென்னையில் ஐந்து மாதம் கழித்து திறக்கப்படுவதை டாஸ்மாக் முன்பு மதுபானம் வாங்க வந்த குடிமகன்களிடம் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் வழங்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மதுபானம் வாங்க வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும், தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவர் எத்தனை மதுபான பாட்டில்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். மதுபானம் வாங்க வருபவர்களின் கையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு டாஸ்டாக் கடைகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.