கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிற மே மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
குறிப்பாக மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 266 மதுபான கடைகள் உள்ளன. அதில் 236 மதுபான கடைகள் மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கரானா வைரஸ் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 30 மதுபான கடைகள் தவிர மீதமுள்ள 236 மதுபான கடைகள் என்று திறக்கபட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக்கடை செயல்படும். அதில் காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் எனவும், ஒரு மணி முதல் 3 மணி வரை 40 வயதிற்குள் உள்ளவர்கள், 3 மணி முதல் 5 மணி வரை 18 வயது முதல் உள்ளவர்களுக்கு மதுபானம் வழங்கப்படும் என நிபந்தனை உள்ளது.
மதுபானம் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமலும் ஆதார் கார்டு இல்லாமல் வரும் நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என காவல்துறையினர் சார்பாக தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால் முக கவசம் இன்றியும் சமூக இடைவெளி இன்றியும் மது பிரியர்கள் மது வாங்கிய நிலைதான் இருந்தது.
ஆரப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். அவர்கள் சென்ற பின் மீண்டும் அனைத்து கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் சுறுசுறுப்பானது. நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் நின்று வாங்கிச் சென்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மதுரை செல்லூர் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்பினர் டாஸ்மாக் எதிராக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.