மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் மதுபானக் கடையில் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் பொன்நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மதுபானக் கடையை முற்றுகையிட்டு இனிமேல் இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கக் கூடாது என்று கடை முன் அமர்ந்து கடையைத் திறக்க விடமால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மதுக்கடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களை கரிமேடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் மதுக்கடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரைக் குண்டு கட்டாகத் தூக்கி, கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஸ்வரி, ''இந்தப் பகுதியில் மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இந்தக் கடையை அப்புறப்படுத்துவதற்கான வேலையை இந்த அரசு இதுவரைக்கும் செய்யவில்லை. கரோனா கால நேரத்தில் இந்தக் கடையைத் தமிழக அரசு திறந்துள்ளது. இந்தக் கடையைச் சுற்றி வீடுகள் இருக்கிறது. குடித்துவிட்டு இங்குள்ள வீடுகள் முன்பு உட்காருவது மது அருந்துவது, பாட்டிலை உடைத்துப்போடுவது, வாந்தி எடுப்பது, யூரின் போவது, ஸ்நாக்ஸ் சாப்பிடும் பேப்பர், குடிப்பதற்குப் பயன்படுத்தும் டம்பளர்களை அங்கேயே விட்டுவிட்டு போவது. இந்தப் பகுதி மக்கள் காலையில் எழுந்தவுடன் இதனைச் சுத்தப்படுத்துவது கஷ்டமாக இருப்பதாக வருத்தப்படுகிறார்கள். மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்தப் பகுதியில் 'மங்கையர்கரசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி' இருக்கிறது. இன்னும் இரண்டு பள்ளிகள் இருக்கிறது. சர்ச் இருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வோர், குடியிருப்பு வாசிகளுக்கு பெரிய பாதிப்பாக இருக்கிறது. ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்'' என்றார்.