கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுப் பிரியர்களுக்கு டோக்கன் முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வியாபாரம் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேகாத வெயிலிலும் குடை பிடித்தும் தலையில் துண்டை போட்டுக்கொண்டு ஆங்காங்கே தனிமைப்படுத்துவதற்காக போட்டுள்ள வட்டத்துக்குள் அமர்ந்துகொண்டு எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து மதுப் பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள்.
சிறுபாக்கம் டாஸ்மாக் கடையில் விளாங்காட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அரசு உத்தரவுப்படி டாஸ்மார்க் கடை விற்பனை முடிந்து கடை மூடப்பட்டது. கடையை மூடும் பணியை விற்பனையாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் செய்துகொண்டிருந்தனர். ஐந்து முப்பது மணி அளவில் டூவீலரில் வேகவேகமாக அரக்கப் பறக்க வந்த இருவர் கண்காணிப்பாளரிடம் மதுபாட்டில்கள் கேட்டுத் தகராறு செய்துள்ளனர்.
அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் போலீஸ்காரர் ராஜ் என்பவர், விற்பனை நேரம் முடிந்துவிட்டது. இனிமேல் நாளைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த இருவரும், அங்கிருந்த மோட்டார் பைக்கை உதைத்து சேதப்படுத்தியதோடு கையில் வைத்திருந்த டூவீலர் சாவியால் போலீஸ்காரர் கையில் குத்திக் கிழித்துள்ளனர்.
இருவரும் டாஸ்மாக் கடை முன்பு போலீஸ்காரரிடம் ரகளையில் ஈடுபட்ட தகவல் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் சக போலீசாருடன் விரைந்து ஸ்பாட்டுக்கு வந்தார். டாஸ்மார்க் கடை முன்பு போலீஸ்காரரிடம் வன்முறையில் ஈடுபட்ட அந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில் புதூரைச் சேர்ந்த 29 வயது அருண்குமார், அவரது நண்பர் 32 வயது மணிவேல் என தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் அருள்குமார் என்பவர் வழக்கறிஞர் படிப்பு முடித்து நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் சிறுபாக்கம் கிராமத்தினர் மத்தியில் பரவியது. 'எல்லாம் போதை படுத்தும் பாடு' என்கிறார்கள் சிறுபாக்கம் கிராம மக்கள்.