தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மொத்தமாக மதுப்பாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று (19/06/2021) மாலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு காரில் 8 பெட்டி குவாட்டர் மதுபாட்டில்களும், 3 ஆஃப், 2 பீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது தகவல் அறிந்து சென்ற ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் கார், மதுப்பாட்டில்கள், காரில் மதுப்பாட்டில்களைக் கடத்திய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி ரோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28), மன்னார்குடி சுந்தரக்கோட்டை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 28), மன்னார்குடி அசேசம் பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28) ஆகியோரையும் இவர்களுக்கு வழிகாட்டிய கொத்தமங்கலம் கலைச்செல்வன் ஆகியோரையும் காவல்துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், கறம்பக்குடி, புதுப்பட்டி டாஸ்மாக் கடையில் இருந்து 89 மதுப்பாட்டில்களை வாங்கி மூட்டையாகக் கட்டிக்கொண்டு செல்ல முயன்ற மன்னார்குடி கட்டக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முரளி (வயது 35) என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மதுப்பாட்டில்களையும் கைப்பற்றினர்.
கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இப்படி மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளதால் கறம்பக்குடி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆதார் அட்டையைக் கேட்படுகிறது. இதனால் அவர்கள் கிராம கடைகளுக்கு செல்கின்றனர். மது வாங்க வருவோர் விபத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் நடந்துள்ளது.