சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் கே.ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீனா, பொறியாளர் மகாராஜன், மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ். விஜயராகவன், அப்பு சந்திரசேகர், வெங்கடேசன், மக்கீன், மணி உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களின் வார்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசினார்கள்.
இதில் சில நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவரின் செயல்பாடு குறித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். நகர் மன்றத் தலைவர் அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சள் பை திட்டத்தை துவங்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தினார்.
அப்போது 21வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் தாரணி, “எனது வார்டுக்குட்பட்ட பேருந்து நிலைய வாயிலில் மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இதனால், அங்கு பார் எப்போதும் நடைபெறுகிறது. இதனால், பேருந்து நிலைய வாயிலில் உள்ள தெருக்களில் போதையில் நின்றுகொண்டு, அந்த தெரு வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களிடம் அத்துமீறுவது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதுமட்டுமின்றி அரைகுறை ஆடையுடன் தெருக்களில் வீழுந்து கிடக்கின்றனர். இது பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது. அந்த வழியாக செல்லும் பெண்கள் இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர். இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
இதற்கு நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார், “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என பதில் அளித்தார்.