கேரள அரசு மருத்துவமனையில்
தமிழருக்கு நேர்ந்த அவலம்!
கேரள மாநிலம் மலப்புர மாவட்டம் என்ற இடத்தில் தமிழ்நாடு அரியலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நண்பர்களுடன் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் இவரது நண்பர் கோடீஸ்வரன் என்பவருக்கும் இடையே கடந்த 30 ம் தேதி பண விவகாரத்தில் தகதாறு ஏற்பட்டுள்ளது. இதில் இரவு தூங்கும் போது கோடீஸ்வரன் என்பவர் அரிவாளால் ராஜேந்திரனை வெட்டியதில் கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ராஜேந்திரன் குட்டிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு போதுமான வசதிகள் இல்லை எனக்கூறி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவமனைகளுக்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளார்.
கோழிக்கோடு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கான உரிய வசதிகள் இல்லை என கூறி அழைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், காயமடைந்த ராஜேந்திரனை நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். தற்போது, ராஜேந்திரன் காலினை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ,உரிய நேரத்தில் சிகிக்கை அளித்திருந்தால் காலினை காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழர் என்பதால் கேரள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டதால், தற்போது காலினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ராஜேந்திரனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் காலினை இழந்த ராஜேந்திரனின் வாழ்வாதரத்திற்கு அரசு சார்பாக நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
- அருள்