திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், பெரியார் சிலை மீது யாரோ காவி சாயத்தைப் பூசி விட்டார்கள் என்பது ஏதோ ஒரு விஷக் கிருமிகள் செய்த வேலை. இதற்காக காவியின் அடையாளமாக இருக்கக்கூடிய பா.ஜ.கவை குறை சொல்வது தப்பு.
காவியை பொறுத்தவரைக்கும் அது ஒரு தர்மா. மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சி முறையை காட்டக்கூடிய ஒரு கலர் தான் காவி. யாரோ ஒருவர் காவி அடித்து விட்டார்கள் அதற்கு பா.ஜ.கதான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மட்டும் இல்லை இது போல் பலமுறை நடந்திருக்கிறது. அந்த விஷக்கிருமிகள் யார் என போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கண்டுபிடிக்க வேண்டும் அதற்காக இதை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம் என்றார்.