சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள வேதியியல், கணிதவியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வுகள் ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும். பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும்" என அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி மொழிப் பாடத்திற்கான தேர்வு; ஜூன் 3 ஆம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெறும். ஜூன் 5- ஆம் தேதி கணிதம், ஜூன் 6- ஆம் தேதி விருப்ப மொழிப் படத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 8- ஆம் தேதி அறிவியல், ஜூன் 10- ஆம் தேதி சமூக அறிவியல், ஜூன் 12- ஆம் தேதி தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் 27- ஆம் தேதி தொடங்கவிருந்த 10- ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.