“தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி)- 12 செ.மீ., குன்னூர் (நீலகிரி)- 9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி)- 8 செ.மீ., பாளையங்கோட்டை (நெல்லை), பிளவக்கல் (விருதுநகர்)- தலா 7 செ.மீ., புதுக்கோட்டை, கடம்பூர் (தூத்துக்குடி), ஸ்ரீவில்லிப்புத்தூர் (விருதுநகர்), உத்தமபாளையம் (தேனி)- தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கேரள கடற்பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.