தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குமரி முதல் வட தமிழக கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 3 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்)- 18 செ.மீ., காஞ்சிபுரம்- 16 செ.மீ., மரக்காணம் (விழுப்புரம்)- 12 செ.மீ., வனமாதேவி (கடலூர்)- 11 செ.மீ., கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்)- 10 செ.மீ., உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.