தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீட் ஆய்வுக் குழுவிடம் கருத்துகளைக் கண்டிப்பாகப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நீட் பாதிப்பை ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவை எதிர்த்து பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கரு. நாகராஜனின் வழக்கு நேற்று (13.07.2021) தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாக நீட் ஆய்வுக் குழு அமைக்கப்படவில்லை. நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாக இல்லை. எனவே தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு செல்லும் என உத்தரவிட்டு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீட் ஆய்வுக் குழுவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.