பொன் விளையும் டெல்டா பூமியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் டெல்டா மாவட்டம் முழுவதும் விளைநிலங்களை கையகப்படுத்தி வந்த நிலையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகளை இணைத்து போராட்டங்களை நடத்தினார்.
அதேநேரத்தில் காவிரி கடைமடைப் பாசனப் பகுதியான நெடுவாசலில் சத்தமில்லாமல் பல விவசாயகளின் விளைநிலங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயத்தில் சம்பாதிக்க முடியாத பணத்தை குத்தகைக்கு கொடுத்தால் சம்பாதிக்கலாம். உங்கள் நிலம் அப்படியே கிடக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், கடைசியாக சுப்பிரமணியன் என்ற விவசாயியிடம் சென்று அதே ஆசை வார்த்தைகளை சொல்ல, என் உயிரே போனாலும் என் விளை நிலத்தை எண்ணெய் எடுக்கவும், எரிவாயு எடுக்கவும் கொடுக்கமாட்டேன். மீறி யாராவது என் நிலத்தில் வைத்தால் என் உயிர் போனாலும் கவலைப்படமாட்டேன். வந்தவர்களில் ஒருவரையாவது தாக்குவேன் என்று கூறி மண்வெட்டியோடு தனி ஒரு ஆளாக அதிகாரிகளை விரட்டினார்.
பலமுறை முயன்றும் பலனளிக்காத அதிகாரிகள் விவசாயி சுப்பிரமணியனை திருவாரூர் ஆய்வுக்கூட்டத்திற்கு அழைத்து அங்கும் மிரட்டல் தொனியில் அதிகாரிகள் பேச, கோடி கோடியாக பணம் கொட்டிக் கொடுத்தாலும் என் நிலத்தை குத்தகைக்கு கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு ஊருக்கு வந்து கடைசி வரை விவசாயம் செய்தார். இந்த தனி நபர் போராட்டத்திற்கு பிறகே உலகமே திரும்பிப்பார்த்த நெடுவால் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.
தன் மண்ணுக்காக இத்தனை உறுதியாக நின்று போராடிய விவசாயி சுப்பிரமணியன் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நெடுவாசல் சுற்றியுள்ள விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.