சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, "தமிழ்நாட்டில் மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயமாக்கப்படாது. விழுப்புரம், கடலூரில் 'நிவர்' புயலால் 144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில்தான் மின் விநியோகப் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 177 இடங்களில் மின் விநியோகம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. பெரும்பாக்கம், மடிப்பாக்கத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு தர இயலாத சூழல் உள்ளது. மழைநீர் வடிந்த பிறகு படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும்.
மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 08.00 மணிக்குள் 80% மின் விநியோகம் வழங்கப்பட்டுவிடும். புயல் காரணமாக மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடலூரில் இரவு 08.00 மணிக்குள், மின் விநியோகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. '1912' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். 'நிவர்' புயலால் தற்போது வரை ரூபாய் 1.5 கோடி அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது" என்றார்.