தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி இன்று (17/02/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எங்கள் கழகத் தலைவரும்,முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர். அதுவும் அ.தி.மு.க. ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு வந்தவர் எங்கள் தலைவர். மெரினா போராட்டமாக இருந்தாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றாலும், அன்று போராடிய இளைஞர்களோடு தோளோடு தோள் நின்றவர்.
அ.தி.மு.க. அரசு, ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள், அதுவும் அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதும் உண்மை; போலீஸ் தடியடி நடத்தியதும் உண்மை. மீனவர்களின் கடைகளை சென்னை நடுக்குப்பத்தில் அடித்து உடைத்ததும் உண்மை. ஏன் போலீசாரை விட்டு டயர்களை கொளுத்தி விட்டு- ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் மீது பழி போட முயற்சி செய்ததும் உண்மை. இதில் எது பொய் என ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
அதன்பிறகு போராட்டத்திற்குப் பணிந்து, ஒன்றிய பா.ஜ.க. அரசும், ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. அரசும், இளைஞர்களின் உணர்வுகளை இனியும் எதிர்க்க முடியாது என்ற தெரிந்த பிறகுதான் ஜல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டது. ஆனால் துவக்கம் முதலே போராடிய இளைஞர்கள் பக்கம் நின்று, சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதாவை ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தவர்தான் எங்கள் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட்டுப் பேசுகிறார்.
சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அ.தி.மு.க. அரசின் அராஜகத்தைக் கண்டித்து, எங்கள் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றியதற்கு 27/01/2017 அன்று பதிலுரை அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான். அந்த பதிலுரையில், “சென்னை மெரினா கடற்கரையில் மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களால் அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது” “குடியரசு நாள் விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது” “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டுமென கோரி வந்தவர்கள். தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்" என்றும் “ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தார்கள்” என்றும், “இந்திய குடியரசுத் தினத்தை நிராகரிக்கிறோம் என்ற பதாகைகள் வைத்திருந்தார்கள்” என்றெல்லாம் சட்டமன்றத்தில் உரையாற்றியது யார்? சாட்சாத் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“காவல்துறையினர் தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களை கலைந்து போகச் செய்தனர்” “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசவிரோத, சமூக விரோத, தீவிரவாத சக்திகள் ஊடுருவி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும் செயல்பட்டவர்களை குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தார்கள்” “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட தீய சக்திகளை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் உரையாற்றி, அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் அமைத்தது இதே ஓ.பன்னீர்செல்வம்தான். சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ, அத்தனையையும் செய்து விட்டு இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும், உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கண்டனம் செய்வதுதான் அரசியல் நாகரிகமா?
எங்கள் தலைவர் மிகத் தெளிவாக, அடுத்த முறை சட்டமன்றத்திற்கு வரும் போது, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்திப் பேசியதை படித்துப் பாருங்கள் என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு சொல்லியிருந்தார். அதைக் கூட புரிந்து கொள்ளாமல் மதுரையில் தன் வேடத்தைக் கலைத்து விட்டாரே, இளைஞர்களின் சாதனையை தன் சாதனை போல் இத்தனை காலமும் பேசி வந்ததை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில், எரிச்சலில் எங்களின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது பாய்ந்து கண்டன அறிக்கை வெளியிடுவதில் அர்த்தமில்லை.
ஆகவே, ஓ.பன்னீர்செல்வம் அன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து, அவர்கள் சொன்னதைக் கேட்டு ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள்; களங்கப்படுத்தினீர்கள் என்பதை தி.மு.க. தலைவர் சொன்னதுபோல் ஆற அமர்ந்து ஒருமுறை உங்களது சட்டமன்ற பதிலுரையை படித்துப் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.