தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
சென்னை மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.
வெளியாகியுள்ள மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மருத்துவ தரவரிசை பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார். அதேபோல், 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனபிரபா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தமிழகத்தில் நவம்பர் 18- ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. 313 எம்.பி.பி.எஸ்., 92 பி.டி.எஸ். இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்" என்றார்.