கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தமிழகத்தில் தளரவில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளும் முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், மது அருந்துவோர் மது பாட்டில்கள் கிடைக்காமல், குடிக்காமல் ஆங்காங்கே அலைமோதுகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நேற்று (01.06.2021) திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் நோக்கி வந்த ஒரு லாரியைக் கண்டாச்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரியில் 78 கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து அந்த லாரியின் கிளீனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீஸார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்ததோடு மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் கர்நாடகத்திலிருந்து காய்கறி ஏற்றிவந்த லாரி ஒன்றில் 600 கர்நாடக மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டது கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இப்படி கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டு தமிழகத்தில் கள்ள மதுவாக பெருகியுள்ளது. அதேபோல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், 46 காவல் நிலைய எல்லை பகுதியில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரும் அந்தந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதன்மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள், பதுக்கி விற்பனை செய்தவர்கள் என 74 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 725 மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர். டாஸ்மாக் கடை திறப்பதற்குள் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை அதிகரித்துவிடும் என்ற நிலை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ளது. காவல்துறை இரவு, பகல் என வாகன சோதனைகள் மூலம் வெளிமாநில மது பாட்டில்கள் தமிழகத்திற்கு கடத்திவருவதைத் தடுத்துவருகிறது. இருந்தும் கடத்தல்காரர்கள் சளைக்காமல் கள்ள மதுபாட்டில்களை தமிழகத்திற்குள் ஊடுருவச் செய்துவருகின்றனர்.