தமிழக- கேரள எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கூடுதல் போலீசார் நியமிப்பதற்காக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்ப் குமுளியில் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் தற்போது முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என்ற ரீதியில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் இருக்கக் கூடிய விவசாய சங்கங்கள் ஆங்காங்கே போராட்டம், நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லோயர் கேம்ப்பில் முற்றுகையிட வாய்ப்பு உள்ளது. இதற்காக குமுளியில் உள்ள தமிழக எல்லை பகுதியான லோயர் கேம்ப், முல்லைபெரியார் நீர்மின் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும், பாதுகாப்பு பணியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி லோயர் கேம்ப் மற்றும் முல்லைப் பெரியாறு நீர்மின் நிலையம் உள்ள குமுளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் போது தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் உள்பட சில போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமியின் தமிழக- கேரள எல்லை ஆய்வு கேரளா போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.