மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துவருகின்றன. தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது. கீழடியில் கிடைத்தப் பொருட்களால் தமிழின் தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரியவந்தது. கிடைத்த சான்றுகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் தொன்மையால் சிலருக்கு வயிறு எரிவதால், அகழாய்வுகள் தேவையற்றது என எழுதுகிறார்கள். தமிழின் பெருமையை ஏற்க மறுக்கும் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது; அவர்களுக்கு வயிறு எரியட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கீழடியின் கொடை குறைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று. வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி" என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.