தேர்தல் என்றாலே திருவிழாதான். அதிலும், வாக்காளர்களுக்கு ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி பணம் கொடுத்து அவர்களை எப்போதும் குஷிப்படுத்தி வரும் நிகழ்வு ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெற்று வருகிறது.
அதிலும் கடந்த தேர்தலை விட இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அ.தி.மு.க. நிர்ணயித்திருப்பது 2,000 ரூபாய். அதில், முதல் தவணையை தேர்தல் பரப்புரை நாட்களிலேயே விநியோகித்து மீண்டும் பூத் சிலிப் கொடுக்கும் சமயத்தில் இரண்டாவது தவணை கொடுக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேற்று நக்கீரன் வெளியிட்ட செய்தியில், கரூரில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 'முதல் தவணையாக ரூபாய் 500-ஐ வாக்காளர்களுக்கு விடுவிக்க அதிமுக துவங்கியுள்ளது' என்று வெளியிட்டிருந்தோம். நக்கீரனின் எதிரொலியாகத் தேர்தல் ஆணையம் கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தொடர்ந்து அதிமுகவிற்கு சாதகமாகவும், திமுக கொடுக்கும் எந்த மனுவையும் பெறாமல் அதிமுகவிற்கு மட்டுமே பணியாற்றிக் கொண்டு இருந்ததை உறுதிசெய்த தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.