கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் நான்கு பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதியானது. சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நான்கு பேருக்கும் தனித்தனி அறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் நன்றாக உள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் கரோனா பரிசோதனை செய்ததில், 166 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 44 பேருக்குக் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பரிசோதனை நடத்தியதில், 2.7%-க்கு குறைவாகத்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமிழகத்தில் தயாராக உள்ளன. கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த போதுமான அளவிற்கு ஊசிகள் கைவசம் உள்ளன. கரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன வசதியும் முழு அளவில் தயாராக உள்ளன" என்றார்.