Skip to main content

7.5% இட ஒதுக்கீடு தாமதம் - கண்கலங்கிய நீதிபதி!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

TAMILNADU GOVERNMENT MADURAI HIGH COURT JUDGES

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் நீட் தேர்வு முடிவை வெளியிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (16/10/2020) விசாரணைக்கு வந்தது.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு காரணமாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தாமதப்படுத்த முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 'சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது, நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது' என்றார்.

 

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரித்துள்ளனர். உணவில்லாத, சமூக ரீதியாகப் பின் தங்கிய ஏழைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளியில் பயில்கின்றனர். முடிவெடுக்க ஒருமாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின் முடிவெடுத்து என்ன பயன்? உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

 

Ad

 

இதனிடையே கிராமப்புற மாணவர்களின் வருத்தம், வேதனையை அளவிட முடியாது என நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

 

இந்த நிலையில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை எனத் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் 29- ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்