7.5 உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் வலியுறுத்தினர். சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒருமாதம் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் தராததால் அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.