தமிழகத்தில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-லிருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் கரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 முதியவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அரசு விதிமுறைகளின்படி முதியவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.
முதியவரின் உயிரிழப்பை கரூர் ஆட்சியர் உறுதி செய்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.