தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. "புதிதாக கரோனா உறுதியான இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள். அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர், 52 வயது பெண்ணுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக கரோனா பாதித்த மூவரும் சென்னை போரூர், புரசைவாக்கம், கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர்கள்." இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.