உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,683 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதேபோல் அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.