சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதுமட்டும் இல்லாமல் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவரப்படுத்தியுள்ளன. இருந்த போதிலும் பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கரோனா பாதிப்பு இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.