அரியலூரில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "காய்ச்சல் முகாம்கள் நடத்திக் கரோனா பரவலைத் தடுத்துள்ளோம். அரியலூர் மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம் மூலமாக 2,81,091 பேர் பயன்பெற்றுள்ளனர். அரியலூர் மருத்துவமனையில் போதுமான உபகரணங்கள் உள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது; தமிழகத்தில் கரோனா அதிகரித்ததை விமர்சித்தவர்கள் தற்போது குறைந்துள்ளதைப் பாராட்டவில்லை.
கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் 6,300 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு 92% பேர் ஆதரவளித்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தேவையான கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்ததும் விரைவில் நிலம் வழங்கப்படும். நீர் மேலாண்மை திட்டத்தில் தேசிய அளவில் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளது" என தெரிவித்தார்.