தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 17/07/2021) தலைமைச் செயலகத்தில் உள்துறை, மதுவிலக்குத்துறைக் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், போக்குவரத்துத்துறை ஆணையர், சென்னை பெருநகர காவல் ஆணையர், காவல்துறைக் கூடுதல் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதைக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் களைய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலருக்கான சலுகைகள், விடுப்பு, வீட்டு வசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறை உபகரணங்களை தயார் நிலையில் வைத்து சேவையாற்றிட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விபத்து இடங்களுக்கு அருகே கடை, உணவகத்தில் உள்ளவர்களுக்கு முதலுதவி செய்யும் பயிற்சி தர வேண்டும். மது, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.