தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.
இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு, மற்ற வார நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்த நிலையில், நேற்று (13/05/2021) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு அமைத்தல், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (14/05/2021) காலை 11.30 மணியளவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
முதல்வர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழக டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.