ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும், மாணவர்கள் நலன் கருதி 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன். "தமிழகத்தில் நவம்பர் 6- ஆம் தேதி முதல் டிசம்பர் 6- ஆம் தேதி வரை 'வேல்' யாத்திரை நடைபெறும். திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்கிழமை போராட்டம் நடைபெறும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பா.ஜ.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறும்.
ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்தாமல் மாணவர்கள் நலன் கருதி உடனே ஒப்புதல் தர வேண்டும். தாமதமானாலும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். மனுதர்மத்தை எழுதியது யார்? அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.